×

ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர அறையில் கண்காணிப்பு கேமரா பழுது: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பதிவான ஈரோடு மேற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமராக்களில் ஒன்று பழுதானது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதையடுத்து, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம் மற்றும் குமாரபாளையம் என 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஈரோடு, சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து, 24 மணி நேரமும் 4 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 3 முகவர்கள் என்னும் அடிப்படையில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி வளாகத்தில் 221 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், ஈரோடு மேற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமின் கண்காணிப்பு கேமரா ஒன்று திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 1 மணி நேரத்தில் வேறு கேமரா பொருத்தப்பட்டு அதிகாலை 1.30 மணியளவில் எவ்வித இடையூறுமின்றி மீண்டும் கேமரா செயல்பட தொடங்கியது.

ஏற்கனவே கடந்த 27ம் தேதி நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஈரோட்டிலும் அதே போன்று சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் பழுது
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘ஈரோடு மேற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்தது தெரியவந்தது. ஸ்ட்ராங் ரூமை கண்காணிக்க ஒரு இடத்தில் மட்டுமின்றி மொத்தம் 8 இடங்களில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஒரு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு, 8 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஒரு கேமரா மட்டுமே பழுதடைந்தது. தொடந்து, தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு பழுதான கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த கேமராவின் ஐ.பி. முகவரியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே அது செயலிழந்தது தெரியவந்தது,’என்றார்.

The post ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர அறையில் கண்காணிப்பு கேமரா பழுது: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Erode West ,Erode ,Erode East ,West ,Parliamentary Constituency ,
× RELATED காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள்...